×

காரனோடை பஜாரில் மாநகர பஸ்களை இயக்கக்கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்: போலீசார் குவிப்பு

 

புழல், பிப். 5: காரனோடை பஜார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளுடன் அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை அருகே சோழவரம் ஒன்றியம், காரனோடை பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த 2 மாநகர பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் இங்கு குறைந்தளவில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் சென்று வருவதற்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

அங்கு புதிய பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணி, டாஸ்மாக் மதுபானக் கடை அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அப்பகுதி மக்கள் ஏராளமான புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காரனோடை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட 2 மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை காரனோடை பஜார் பகுதியில் இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஜானகிராமன், கருணாகரன், நடேசன், பிரதாப் சந்திரன், நீலமேகம், நக்கீரன், முத்துலட்சுமி உள்பட ஏராளமான பொதுமக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு சோழவரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post காரனோடை பஜாரில் மாநகர பஸ்களை இயக்கக்கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Left ,Karanodai Bazar ,Puzhal ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!